Saturday, June 25, 2011

puranaanuuru 16

16. செவ்வானும் சுடுநெருப்பும்

பாடியவர்: பாண்டரங் கண்ணனார் (16). இவருடைய இயற்பெயர் கண்ணனார். இவர் தந்தையார் பெயர் பாண்டரங்கன். ஆகவே, இவர் பாண்டரங் கண்ணனார் என்று அழைக்கப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர். பாண்டரங்கம் என்பது ஒருவகைக் கூத்து. அக்கூத்தில் வல்லவராக இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (16, 377). இவன் இராச சூயம் என்ற வேள்வி செய்ததால் இவனுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. இவன் ஆட்சிக்காலத்தில் சேர நாட்டை முதலில் மாரிவெண்கோ என்பவனும் அவனுக்குப் பிறகு சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவனும் ஆட்சி புரிந்தனர். சோழன் பெருநற்கிள்ளிக்கும் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறைக்கும் போர் மூண்டது. அப்போரில் சோழனுக்குத் துணையாகப் போர்புரிந்த மலையமான் என்பவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை வென்றான்.

இச் சோழமன்னனின் காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

பாடலின் பின்னணி: இப்பாடலில் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவர்களின் நாட்டை அழித்த போர்த்திறத்தைப் புலவர் பாண்டரங்கண்ணனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: மழபுல வஞ்சி. பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல், எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப் பற்றிக் கூறுதல்.

வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்புஊட்டி
5 மனைமரம் விறகுஆகக்
கடிதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்
10 துணைவேண்டாச் செருவென்றிப்
புலவுவாள் புலர்சாந்தின்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்!
மயங்குவள்ளை மலர்ஆம்பல்,
பனிப்பகன்றைக் கனிப்பாகல்
15 கரும்புஅல்லது காடுஅறியாப்
பெருந்தண்பணை பாழ்ஆக
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை;
நாம நல்லமர் செய்ய
ஓராங்கு மலைந்தன பெரும!நின் களிறே.

அருஞ்சொற்பொருள்:
1. விரைவு = வேகம்; புரவி = குதிரை. 2. மழை = மேகம்; உரு = நிறம்; தோல் = கேடயம். 3. முனை = போர்முனை; முருங்க = கலங்க; தலைச்சென்று = மேற்சென்று. 4. கவர்பு = கொள்ளை; ஊட்டி = அடித்து (ஊட்டுதல் = புகட்டுதல், அனுபவிக்கச் செய்தல்). 6. கடி = காவல்; கடிதுறை = காவற் பொய்கை; படீஇ = படியச் செய்து. 7. எல்லு = கதிரவன்; எல் = ஒளி. 8. செக்கர் = சிவப்பு, செவ்வானம். 9. புலம் = இடம்; இறுத்தல் = செலுத்தல், தங்குதல். 10. செரு = போர். 12. உரு = அச்சம்; குருசில் = குரிசில் = அரசன், தலைவன். 13. மயங்குதல் = கலத்தல்; வள்ளை = ஒருகொடி; ஆம்பல் = அல்லி. 14. பகன்றை = சீந்தில், சிவதை, கிலுகிலுப்பை (ஒருவகைக் கொடி). பாகல் = ஒருவகைக் கொடி. 15. காடு = புன்செய் நிலம். 16. பணை = மருத நிலம்;. 17. ஏமம் = காவல். 18. நாமம் = அச்சம். 19. ஓர் ஆங்கு = ஒன்றுசேர, ஒன்று போல், எண்ணியவாறு; ஆங்கு = அவ்வாறு; மலைத்தல் = பொருதல், போரிடுதல்.

கொண்டு கூட்டு: குருசில், பெரும, நீ அமர் செய்ய நின் களிறு ஓராங்கு மலைந்தன எனக் கூட்டுக.

உரை: போரில் தேர்ச்சி பெற்ற, விரைந்து செல்லும் குதிரைப்படையுடனும், மேகம் போல் பரப்பிய கேடயங்களுடனும், போர்க்களம் கலங்குமாறு மேற்சென்று பகைவர்களின் நெல்விளையும் வயல்களைக் கொள்ளையிட்டாய். அவர்களின் வீட்டிலுள்ள கதவு, தூண் போன்ற மரத்தால் செய்த பொருட்களை விறகாக்கி அவற்றை தீயில் எரித்தாய். யானையைப் படியச் செய்து காவல் உள்ள நீர்த்துறைகளைப் பாழ் செய்தாய். பகைவர்களின் நாட்டில் நீ மூட்டிய தீயிலிருந்து எழுந்த ஒளி, சுடருடன் கூடிய ஞாயிற்றின் சிவந்த நிறம் போலத் தோன்றியது. பெருமளவில் படையைப் பரப்பி, துணைப்படை தேவையில்லாமல் போரில் வெற்றிபெற்றாய். புலவு நாற்றத்தையுடைய வாளும், பூசிய சந்தனம் உலர்ந்த மார்பும், முருகன் போன்ற சினமும், அச்சமும் பொருந்திய தலைவ! ஒன்றோடு ஒன்று சேர்ந்த வள்ளையும், மலர்ந்த ஆம்பலும், குளிர்ந்த பகன்றையும், பழுத்த பாகலையும் உடைய, கரும்பு அல்லாத பிற பயிர்கள் விளையாத புன்செய் நிலமும், பெரிய குளிர்ந்த மருத நிலமும் பாழாகுமாறு பகைவர்களின் காவலுடைய நல்ல நாட்டிற்குத் தீ மூட்டினாய். அரசே! அஞ்சத்தக்க நல்ல போரை நீ எண்ணியவாறு உன் யானைகள் செய்தன.

Monday, June 6, 2011

பாரதியின் இன உணர்வு

பாரதியின்  இன உணர்வு  

A different perspective at Keetru.com, please see

http://www.keetru.com/literature/essays/valasa_vallavan_2.php


KeetruLiteratureArticle
கட்டுரை
பாரதியின் பார்ப்பன இன உணர்வு
வாலாசா வல்லவன்


...முந்தைய பகுதி: பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மை என்ன?

பாரதிக்கு இளமைக் காலம் முதலே பார்ப்பன இன உணர்வு இருந்து வந்துள்ளது என்பதை வாழ்க்கை வரலாறு, கவிதைகள், கதைகள், கட்டுரைகள் முதலியவற்றைப் படிக்கும் போது அறிய முடிகிறது. ஆகவே இவருடைய பார்ப்பன இன உணர்வு எத்தகையது என்பது இவண் ஆராயப்படுகிறது.

Bharathi பாரதியார் தன்னுடைய சுயசரிதையைக் ‘கனவு’ என்ற தலைப்பில் 1910இல் வெளியிட்டுள்ளார். இதில் இவருடைய இளமைக் காலத்தில் தன்னுடைய தந்தைக்கு வறுமை நிலை வந்ததைக் கூறும்போது கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

பார்ப்பனக் குலம் கெட்டழிவு எய்திய
பாழடைந்த கலியுகம் ஆதலால்
வேர்ப்ப வேர்ப்ப பொருள் செய்வதொன்றையே
மேன்மை கொண்ட தொழில் எனக்கொண்டனன் (1)

எனக் கூறுகிறார். பார்ப்பனர்கள் உடல் வியர்க்க வேலை செய்யக்கூடாது என்பது மனு தர்மத்தின் விதி. இந்தப் பாழாய்ப் போன கலியுகத்தில் தன்னுடைய தந்தை வியர்வை சிந்திப் பொருள் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாக நேர்ந்தது என்று உளம் நொந்து கூறுகிறார்.

‘சமூகம்’ என்ற தலைப்பில் பாரதி நால்வருணத்தை மிகவும் வலியுறுத்திப் பாடுகிறார்:

வேதம் அறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி
பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
நாலு வகுப்புமிங்கு ஒன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி (2)

இங்குப் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும் என்கிறார் பாரதி. நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்கிறார். அப்படியானால் பார்ப்பானுக்கு என்றைக்கும் சூத்திரன் உழைத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்; பார்ப்பான் கோவில் பூசை செய்து விட்டு நோகாமல் சாப்பிட வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்.

To read the full content, please see

http://www.keetru.com/literature/essays/valasa_vallavan_2.php