Friday, March 6, 2015

அருணகிரி பாட, அதல சேடனாராட, அகிலமேரு மீதாட

கம்பத்திளையனார் கோயில் தோன்றிய வரலாறு! 

http://www.dinamani.com/weekly_supplements/vellimani/

அருணகிரிநாதர் காலத்தில் திருவண்ணாமலைப் பகுதியை பிரபுடதேவன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். முருகனின் அருள்பெற்ற அருணகிரிநாதர் மீது மட்டற்ற பக்தியும் அன்பும் பூண்டு அவரை உபசரித்து மகிழ்ந்திருந்தான்.
அதே நேரத்தில் சம்பந்தாண்டான் என்னும் பெயருடைய பெரும் தமிழ்ப் புலவனும் மன்னரின் அபிமானத்திற்கு உரியவனாக இருந்தான். சம்பந்தாண்டான் மிகச்சிறந்த புலவன் மட்டுமல்ல, பெரும் தேவி உபாசகன். தன் மந்திர உச்சாடன பலத்தால் காளியின் அருளுக்குப் பாத்திரமானவன். இதுவே அவனது அகந்தைக்குக் காரணமாயிற்று. தனக்கு நிகர் இந்தப் பூமியில் எவனுமிலன் என்று செருக்கோடு மிடுக்காய் உலாவி வந்தான்.
மன்னன் தன்மீது காட்டும் அன்புக்கும் மரியாதைக்கும் இணையாக அருணகிரியாரையும் போற்றி வருவது கண்டு அவனுக்கு எரிச்சல்! மன்னனைத் தவிர அருணகிரியாருக்கு வெளியிலும் இருந்த புகழைக் கண்டு மனம் குமைந்தான். எப்படியாவது மன்னர் முன்பு அருணகிரியாரை மட்டம் தட்டி மண் கவ்வச் செய்ய வேண்டும் என்று முனைந்து ஒருநாள் அரசர்முன் அருணகிரியாருக்கு சவால் ஒன்று விடுத்தான்.
"என் மந்திர பலத்தால் அழைத்தால் காளிதேவி என் முன் பிரசன்னமாவாள்... அதுபோல நீர் உமது முருகனை வரவழைத்துக் காட்ட
முடியுமா? மன்னர் பிரானுக்கு தரிசனம் செய்து வைக்க முடியுமா?' என்று அரசவையில் பெரும் குரலில் கொக்கரித்தான். மன்னன் பிரபுட தேவனுக்கோ இவர்கள் போட்டியின்
காரணமாய்த் தனக்குக் காளியின் தரிசனமும் முருகனின் தரிசனமும் கிட்டும் என்று மகிழ்ந்து இந்தப் போட்டியை ஊக்குவித்தான். அருணகிரிநாதரும் இதற்கு இணங்கினார்.
சம்பந்தாண்டான் அந்த இரவு முழுவதும் உறங்கவில்லை. இரவு முழுவதும் விழித்திருந்து அபிசார ஹோமம் செய்து உரத்த குரலில் மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருந்தான்.
ஆனால் அவன் வழிபடும் காளிதேவி பிரசன்னமாகவில்லை. சம்பந்தாண்டான் தோல்வியுற்றதை அடுத்து மன்னன் தனது பரிவாரங்கள் பின்தொடர திருவண்ணாமலை கோயிலினுள் தியானத்தில் ஈடுபட்டிருந்த அருணகிரிநாதர் முன் சென்று பணிந்து, "பெருமானே! காளி தேவியைத் தருவித்துக் காட்டுவேன் என்று சூளுரைத்த சம்பந்தாண்டான் தோல்வியுற்றனன். கருணைகூர்ந்து தாங்கள் கந்தபெருமானை வரவழைத்து நாங்கள் உய்யும் பொருட்டு காட்டியருள வேண்டும்'' என்று வேண்டினான்.
அருணகிரியாருக்கு உள்ளத்தே அசைக்கவே முடியாத ஓர் உறுதி உண்டு. ""கந்தவேளை எந்த வேளையுங் காணலாம். எங்கே நினைக்கினும் அங்கே என்முன் வந்து எதிர்நிற்பன் என்னப்பன்'' என்பதே அது.
மன்னன் வேண்டியவுடன் சிவகங்கையில் முழுகி, அங்கே கரையில் இருக்கும் பதினாறுகால் மண்டபத்தில் ஒரு தூண் அருகில் நின்று கண்மூடி தியானித்து உள்ளம் உருக வேண்டினார். ""பெருமானே! முன் ஒருமுறை பிரகலாதர் பொருட்டுத் திருமால் தூணிலிருந்து வெளிப்பட்டார். இப்போது எளியேன் என் பொருட்டு கருணையே வடிவான தேவரீர் இத்தூணிலிருந்து வெளிப்பட்டு எங்களை உய்விக்க வேண்டும்'' என்று துதித்தார்.
"எந்தத் திசையினும்', "கொடிய மறலியும்', "இருவர் மயலோ! என்ற திருப்புகழ் பாடல்களை அமுதினும் இனிய குரலில் உள்ளமுருகப் பாடினார். எனினும் முருகவேள் காட்சி தரவில்லை. "என் முருகன் கைவிட மாட்டானே, வராது இருப்பதற்கு யாது காரணம்?' என்று மயங்கிய அருணகிரிநாதர் அடுத்த கணமே ஆழ்நிலை தியானத்திற்குச் சென்றார். அப்போது அவர் கண்ட காட்சி...
சுற்றிலும் பணிப்பெண்கள் ஏதோ பேசிச் சிரிக்க, உமா தேவியார் முருகனைத் தன் மடியில் இறுக அமர்த்திப் பிடித்துக் கொண்டு ஏதோ வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தார். முருகனுக்கோ தன் பக்தன் வேண்டுவது காதில் விழுகிறது.
உடனே, அன்னையின் மடியிலிருந்து திமிறி எழ முயல்கின்றார். ஆனால் அன்னை பிடித்திருந்த பிடியோ இளகுவதாகத் தெரியவில்லை. இதனைக் கண்ட அருணகிரியாருக்கு இது எதனால் என்பதும் ஞானதிருஷ்டியில் தெரிந்துவிட்டது. எல்லாம் சம்பந்தாண்டானின் வேலை. காளிதேவி அன்னை உமாதேவியின் ஓர் அம்சம் அல்லவா? அதனால் காளி வந்து தரிசனம் தரவில்லை என்றாலும் எப்படியாவது முருகனை வரவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்று வேண்ட, காளியும் உமாதேவியிடம் முருகனைத் தன் மடியில் சிறிதுகாலம் வைத்திருக்க வேண்டுகிறாள்.
முருகனை அன்னையின் பிடியிலிருந்து விடுவிப்பது எப்படி? முருகன் திருவருளால் அவருக்கு ஒரு யோசனை பளீர் என்று உதித்தது. முருகன் ஏறி வந்த அவன் வாகனமான மயில் உமாதேவியாரின் அருகில் நின்றபடி கீழே எதையோ கொத்தித் தின்று கொண்டிருந்தது. மயிலைக் கண்டதும் உடனே அந்த மயில் மீது ஓர் இனிய பாடலை இசைத்தார்.
அந்த இசையை கேட்டதும் மயில் ஆனந்த பரவசமாகி அற்புதமான நடனம் ஒன்றை ஆடியது. மயிலின் இந்த ஆனந்த பரவச நடனத்தைக் கண்டு அங்கிருந்த அனைவரும் உமாதேவியார் உட்பட மெய்மறந்து இன்ப நிலை எய்தினர். மயிலின் அற்புத நடனத்தால் முருகனைப் பிடித்திருந்த அன்னையின் பிடி நழுவிற்று. அவ்வளவுதான்... இதற்குத்தானே காத்துக் கொண்டிருந்தார் முருகன்! அன்னையின் பிடி இளகியதும் உடனே மடியிலிருந்து துள்ளிக் குதித்து மயிலின் மீது ஏறி நொடியில் திருவண்ணாமலை கோயிலின் ஈசான திசையில் உள்ள தூணிலிருந்து வெளிப்பட்டு அனைவருக்கும் காட்சி அளித்தார்! மன்னன் பிரபுட தேவன் கந்தவேள் தரிசனம் பெற்று ஆனந்த கூத்து ஆடினான். முருகன் தோன்றிய அந்தத் தூணை கர்ப்பக்கிரகத்தில் அமைத்து அதைச்சுற்றி ஒரு கோயிலையே கட்டினான் அவன். அந்தக் கோயில்தான் திருவண்ணாமலை ஷேத்திரத்தில் சிவகங்கைக் கரையில் ஆயிரங்கால் மண்டபத்திற்குத் தென் திசையில் கம்பத்திளையனார் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
அன்னையின் மடியிலிருந்து முருகன் துள்ளிக் குதித்து மயில் மீது தாவி ஏறியவுடன் அருணகிரியார் பாடிய மிகப் பிரசித்த பாடல்தான், "அதல சேடனாராட அகிலமேரு மீதாட, அபின காளி தானாட'' என்று துவங்கும் திருப்புகழ் பாடல். இந்தப் பாடலில் முருகன் மயில் மீது ஆடிவரும்போது அவருடன் கூட யார் யாரெல்லாம் ஆடி வர வேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலே கொடுத்திருக்கிறார்! இந்தப் பாடலை அனுதினமும் பக்தியுடன் பாராயணம் செய்வோர் என்றோ ஒருநாள் தம் வாழ்நாளில் தம் அகக் கண்களிலாவது முருகன் தரிசனம் பெறுவர் என்பது பெரும் நம்பிக்கை.
- மயிலை சிவா.

 

 

No comments:

Post a Comment