Thursday, September 19, 2013

Dinamni News 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் - தமிழக அரசின்  சின்னத்தை எதிர்த்து வழக்கு: 

உயர்நீதிமன்றம் தள்ளுபடி

First Published : 20 September 2013 04:30 AM IST
தமிழக அரசின் சின்னத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தை மாற்றக் கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஆர். கண்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்திய தேசியக் கொடியின் நீள, அகலம் 3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்று இந்திய கொடிச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் சின்னத்தில் உள்ள இரண்டு தேசியக் கொடியில் இந்த விதி மீறப்பட்டுள்ளது. எனவே, இதனை சரிசெய்ய உத்தரவிட வேண்டும்.
தமிழக அரசின் சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் இடம் பெற்றுள்ளது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். எனவே, ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோயில் கோபுரம் அரசு சின்னத்தில் இடம் பெற்றிருப்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே, இந்த கோபுரச் சின்னத்தை மாற்ற வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே. அகர்வால், எம். சத்தியநாராயணா ஆகியோர், தமிழக அரசின் சின்னத்தில் உள்ள கொடியை தேசியக் கொடி என்ற கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. எனவே, இதில் இந்திய கொடிச் சட்டம் மீறப்பட்டதாகக் கருதமுடியாது. கோயில் கோபுரம் என்பது தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் சின்னமாகும். எனவே, அதனைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாகக் கருத முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment